Tuesday, October 30, 2012

இன்று பிறந்த நான்(ள்)

முதல் வாழ்த்து யாருடையது
என்ற  அந்த நட்பின் போட்டியில்
என் தூக்கமே வென்றது...

=O=O=

இன்று ஒரு நாள் மட்டும்
உறக்கத்தின் தொந்தரவுகளும்
12 மணி தொன தொன பேச்சுகளும்
சுகமாய்  இருந்தது

=O=O=


தொழில்நுட்ப  வளர்ச்சி
தொப்புள் கோடி கூட
வயர்லெஸ் ஆகிப் போனது
தொலைபேசியில் வாழ்த்துகிறாள் அன்னை

நட்பு நாகரிகம் ஆகிப்போனது
தானியங்கி மென்பொருள்
வாழ்த்து செய்தி அனுப்புகிறது
நண்பனின் பெயரில்

=O=O=

கடனே அனுப்பிவைக்கும் 
happy birthday நண்பர்கள் ஏனோ  

"ஊர் தாதாவை
மர்ம  நபர் கொலை செய்துவிட்டால்
மகனிடம் துட்டி கேட்க வரும்
நண்பர்களை விட
நான் செய்யவில்லை என்று சொல்லி
அவனது பழி தப்பிக்கும்
பழைய  பகைவர்களை"
நியாபகபடுத்துவதை தடுக்க முடியவில்லை

=O=O=

எந்த கடையிலும் என் அன்னையின்
பாசம் கிடைக்கவில்லை
என்  எந்த சம்பாத்தியமும்
அதை வாங்க போதவில்லை ...
அவளும் நானும் தூர ...
ஆனால் அவள் பாசம் மட்டும்
என்றும் மாறா!!!

வாங்கிய லெவிஸ் ஜீன்சிலும்
பேசிக்ஸ் டீ சர்ட்டிலும்
எனக்காக உழைக்க உறங்காத
இவர்களின் இரவுகளின் சாயம் இருந்தது

=O=O=

பழைய மருந்துகள்
காய்ந்த பற்பசைகள்
தேங்காய் எண்ணெய்கள்
முகப் பவுடர்கள் வீசிய முட்டைகள்
10 நாள் காபி பேனா மை
என்று எதுவுமே கலந்து
என் மீது ஊற்றபடாத போது

ஆறு முறை குளித்து வந்து
ஏழாவது  முறை மீண்டும் அழுக்காகி
இரவு 12 மணிக்கு எட்டாவது குளியல்
நான் குளிக்காதபோது

23 வயதில்
முதுமை தட்டியது உணர்கிறேன்...

=O=O=

காதல் கலந்து அவளது
வாழ்த்து  வரும் என்று
போன வருடம் காத்திருந்தது
நியாபகம் வந்தது

இன்னமும் காத்திருகிறேன்...
நிறுத்த முடியவில்லை

=O=O=

எதிர்காலத்தில்
எதோ ஒரு வகுப்பு மாணவன்
"ராமானுஜமென்பவர் 1989 ஆம் ஆண்டு
சோலைமலை யோகமலர் தம்பதிக்கு
விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் பிறந்தார்"
என்றென்னை படிப்பான் என்று சொல்லிக்கொண்டேன்

ஆனால் அதற்கான
எந்த  ஒரு முயற்சியும் இல்லாமலே
23 ஆண்டுகளை வீணாக்கியது
இன்று சுடுகிறது ...


Wednesday, October 24, 2012

நெய் தேடும் வெண்ணை

ஐயாயிரத்திற்கு நீ தின்றும்
ஹோட்டல்காரன் முகத்தில்
பார்க்க முடியாத மகிழ்ச்சி 
ஐந்து ரூபாய் அன்பளிப்பில்
பரிமாறும் பையன் முகத்தில்!

வெளிநாட்டு  ரகம் ன்னு
ஆயிரத்திற்கு வாங்கிய செருப்பிடம்
இல்லாமல்  போகிற விசுவாசம்
20 ரூபாயில்ஆரம்பித்து 15 ரூபாயில்
பேரம் முடிகிற அந்த கிழவரின்
தையலில் உழை(நிலை)த்திருக்கும்

தாடி, கைபேசி டாப்அப்,
இரண்டு மணி பேச்சு, காதல்
பிறந்த நாள் பரிசு, பக்க பக்க கவிதை 
என்று எதிலும் இல்லாத அந்த நேசம்
அதோ நீ வரும்வரை உறங்காமல்
உன் தாய் உருவில் காத்திருக்கும்

உறக்கம் உணவு உறவு
எல்லாவற்றையும்  தூக்கி போட்டுவிட்டு
நீ தேடித்திரியும் உன் தேடல்
நீ தூக்கி போட்டதில்தான் 
இருக்குது என்பதை தெரிந்துகொள்ளாததேனோ


தேடி கண்டுபுடிக்க வேண்டியதில்லை
உன் தேவைகள் எல்லாம்...
தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும்
கடவுள் போலத்தான்...
நீ  உணரவேண்டியது மட்டும்தான் பாக்கி

Tuesday, October 23, 2012

ஆடடே ஆச்சரியக்குறி - 1

வேடிக்கை பார்க்க போன என்னை
தாவி பாய்ந்து கவ்வி கொண்டு
காதலின் குளம் புகுந்தது
அவள் விழி மீன்கள்

=O=O=

அவள் முக்குத்தி கலங்கரை விளக்கம்
அனால் அதை பார்த்த பிறகு தான்
அடிக்கடி இருதயக்கப்பல் கரைதட்டுது

=O=O=

துணிக் கடை நுழைந்த
பெண்ணை ஒரே ஒரு உடை
தேர்ந்தெடுக்க சொல்வதுதான்
பெண்ணிற்கு கடினமான சவால்...

இரண்டு உடை காட்டி
எது எனக்கு அழகு என்று
அவள் கேட்பது தான்
ஆணுக்கு  கடினமான கேள்வி...

=O=O=

எனது மின்னஞ்சல்களுக்கும்
எந்தவொரு   குருஞ்செய்திக்கும்
நீ பதில் அனுப்பும் பொழுதை விட
அனுப்பாத போதுதான் அதிகம் மகிழ்கிறேன்

என்  மனம் விரும்பிய பதில்களை
நானே நிரப்பிக் கொள்ளலாமல்லவா!

=O=O=

உன்னை நினைக்க
தொடங்கிய  பிறகுதான்
ஒரு நாளுக்கு 24மணிநேரம்
போதாமல் தவிக்கிறேன்...

பின்குறிப்பு - கற்பனை காதல் போதையாகையில் காதல் கொண்டவர்கள் மீது பொறாமை அதிகமாகிறது.

Thursday, October 18, 2012

மழையின் மழலை

மேகக் குழந்தை
கால் இடறி விழுகிறாள்
இங்கே ஊரே சிரிக்குது

O~O~O

மனிதன் எவ்வளவு
மனிதனை தொலைத்துவிட்டான்
என்பதை தூறலுக்கு விரிகிற
குடைகளை எண்ணிப் பாருங்கள்

O~O~O

மழை வேளையில்
மறுநாள் காளானுக்கு முந்த
திட்டமிடுகையில்  அட்ரீனலின் சுரப்பெடுக்கும்
அம்மாவின் வதக்கிய காளான் நினைக்கையில்
எச்சிலோடு தேனூறும்
இன்றெல்லாம் நாளையின் சாலை நிலைமை
நினைத்தே வயிற்றில் புளி கரையும்

O~O~O

சிமெண்ட் காடுகளில்
துணியாலான குடை காளான்
இன்றைய மழை காலம்

O~O~O

சிறை கம்பி பின்னால் மகனை
பார்க்கும் தாயவள் ஏக்கமாய்
வெப் காமீரா வழியே காத(லனை)லியை
பார்க்கும் காதலின் வலியாய்
அதோ அந்த கட்டிடத்தின்
சன்னல் கண்ணாடியில் மோதி வழிகிறது
கணினி முன் சிறை இருக்கும்
அவர்களை பார்த்து அழுகையாக

O~O~O

எவராவது கவனித்ததுண்டா?
விவசாயி விசித்திர மனிதன்...
அவன் கண்ணீர் வறண்டிருக்கும்
புன்னகையில் தான் ஈரப்பதமிருக்கும்
மழையாய் சிரிப்பான் அவன்

O~O~O

குடைகளை மடக்கிவிட்டு
ஒரு முறை மழையினில்
நடந்து பாருங்கள் ...
இன்னொரு முறை
மனிதனாய் பிறக்க ஆசை படுவீர்

மழையை பற்றி  - 1

Sunday, October 14, 2012

இரண்டாவது நாக்கு

பீசா கடையிலிருந்து ஐந்திலக்க சம்பளம்
ஐபோனில் அம்மாவிடம் கேட்கிறான்...
சாப்பிட்டியா அம்மா, என்ன சாப்பிட்ட?
நெல்லு சோறும் சாம்பாரும்
என்று பொய் உரைக்கிறாள் ...
கூழ் குடித்த வட்டிலில் கோலமிட்டபடி

பொய்யின் முந்தியில் முடிஞ்சுவச்ச காசு
இவன் எதிர்காலத்து உயிலெழுதா சொத்து

பத்துமாத பாசம் மூன்று முடிச்சு நேசம்
தலைஎழுத்தை  மாற்றிவிட அரபுநாடு போனவனிடம்
கேட்கிறது "வேலஎப்படி, தங்குற இடம் வசதியா" என்று
ராச வேல; போக வர காரு; தங்க வீடு
என்று பொய் உரைக்கிறான்
ரப்பர் ரோடு போட்ட களைப்பில் உறங்கிய
 20 பேருடன் ஓர் சிற்றறையிலிருந்து ...

பொய் வீச்சமெடுத்த அந்த அறையிலும்
அவர்களின் கனவு மட்டும் மணந்து கிடந்தது

நான் ஆட்சிக்கு வந்தால் அதை தருவேன்
நான் ஆட்சிக்கு வந்தால் இதை தருவேன்
என்று எதை எதையோ சொல்லி
எல்லாவற்றையும் எடுத்து போக
போட்டி போடும் அரசியல்வாதிகளின் பொய்கள்...

இந்த பொய்க்கு அந்த பொய் பரவாயில்லை
ஏதாவது  மா(ஏ)ற்றம் வருமென்ற நம்பிக்கையில்
எதோ ஒரு பொய்யிடம் சிக்கிவிடுகிற மக்கள் ...

எதோ ஒரு முதலிரவு அறையில்
நீங்க தான் என் முதல் காதல் என்கிற பொய்
காதலை தொலைத்தவன் நண்பனிடம்
அவளை(னை) மறந்துவிட்டேன் என்கிற பொய்
உன் மேல் சத்தியமாய் இனி
அந்த கருமத்தை தொடமாட்டேன் என்கிற பொய்
அம்மா  ஸ்பெஷல் கிளாஸ் என்கிற பொய்
அடுத்த பரிச்சையில் நல்ல மார்க் எடுப்பேன்
இப்ப ஒரு தடவ வாங்கி கொடுங்க என்கிற பொய்
"இந்த வருடம் முதல்" ஆண்டு முதலே
தொடங்கிவிடும் எதோ ஒரு பொய் 
 மச்சான் உன்ன தான் பார்க்கிறாள் என்கிற பொய்

என்று எதோ ஒரு பொய்யின்

கோர பல்லிடுக்குகளில் சிக்கி உலகம்
இரையாகி கிடக்குது ...
ருசி கண்டுவிட்டது உலகத்தின் நாக்கு

Sunday, October 7, 2012

உப்பு கரிக்கும் சிரிப்பு

புகைப்படம் - அன்னை இல்லம், மயிலாப்பூர், சென்னை

மூணு  மகன் ரெண்டு மவா
 
மகளுங்கள கட்டி கொடுத்தது
அமெரிக்கா மாப்பிள்ளைக்கு
வருசத்துக்கு ஒருக்கா
பாக்க வருவா… படிக்கிறதால
பேரப்பிள்ளைகள கூட்டி வரமுடியலையாம்
 
மவனுவ வியாபாரம்
பணக்கார  மருமவளுங்க
அமெரிக்காவுல படிக்குற பேரப்பசங்க
 
டிவிப் பெட்டி
மூத்தவன் வாங்கி கொடுத்தது
இளையவன் ரெண்டு பேரும்
ஒரு பட்டுபுடவ வாங்கிட்டு வந்தானுங்க
மகளுங்க ஒரு நெக்லசு வாங்கி வந்தாங்க
அனுபவிக்குற வயசில்லன்னு சொன்னேன்
சொன்னா  கேக்க மாட்டுக்குது. பாசம்!!…
 
தேக்கு கட்டிலு
பட்டரி காத்தாடி
நடக்க குச்சி படிக்க புஸ்தகம்
ஊள்ளன் ஸ்வெட்டரூ
எவ்வளவோ வந்தும் அவர்கள் எதிர்பார்த்தது மட்டும்
வந்தே சேரவில்லை. எவர் வந்து தருவார்…
 
அவர்களின்  பொக்க வாய் சிரிப்பெல்லாம்
கண்ணீர் உப்பின் கரிப்பிருக்கு. யாருக்கு தெ(பு)ரியும்
பின்குறிப்பு  - இன்று நான் பார்த்து கொள்வேன் என்றுவிட்டு நாளை உன்னை பெற்றவரையும் இந்த நிலைமைக்கு ஆளாக்கும் நமக்கு சமர்ப்பணம்

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்